அவனியை ஆள்கின்ற அநீதிகளை அழித்திடவே
அக்கினியின் வடிவாக அவதரித்த சக்தி!
மண்ணில் மாந்தரெல்லாம் போற்றுவார்- இவள்
மழலை மொழியினிலே மயங்குவார்!
கல்வியை கண்ணென்று கொள்வாள்-இவள்
கருணையால் கடவுளையும் வெல்வாள்!
ஒழுக்கம் ஒளிர்ந்திடும் இவளிடத்தில்-உயர்
கலைகள் வளர்ந்திடும் இவள் கரத்தில்!
கலகலவென் றொலிக்குமிவள் வளைகரம்-பாரின்
கவலைகளை துடைத்தொழிக்கும் மலர்கரம்!
பெண்ணுக்கு படிப்பெதற்கு என்போரின்-நாவை
மண்ணுக்கு இறையாக்குமிவள் பொற்கரம்!
மண்ணின் பொறுமையுடயாள் பெண்ணென்பார்-இவளோ
விண்ணிற்குக் கலமேறி வியப்புறச் செய்வாள்!
விண்ணொளி முழுதாய் தந்த சூரியனும்-இவள்
கண்ணொளி தனைக்கண்டு வெட்கிடுவான்!
மதியென்று பெயர் படைத்த சந்திரனோ -தெளிந்தஇவள்
மதிகண்டு தன் பெயரை மாற்றிடுவான்!
காற்றும் கலங்குமிவள் வேகங்கண்டு-சரித்திரங்கள்
போற்றும் இவள்செயலின் தீரங்கண்டு!
ஆர்ப்பரிக்கும் கடலும் அடங்குமிவள் குரல்கேட்டு-மூடரின்
வேரறுக்கும் பெண்முரசின் ஒலிகேட்டு!
பட்டங்கள் பலவும் இவள் பெறுவாள்-நாட்டின்
சட்டங்கள் புதிதாக இயற்றிடுவாள்!
வீட்டிலிவளை பூட்டிவைக்க எண்ணினால்-உங்கள்
நாட்டையே அக்கினிக்கு இரையாக்குவாள்!
அழகான அடிமையென்று அடக்க நினைத்தீரோ-மூடரே
அடிவான மின்னலவள் அடிபணிந்து விலகிடுங்கள்!
கூண்டுக்குள் அடைத்திடவே கிளிஎன்று புகழ்ந்தீரோ-உங்களை
கூண்டோடு அழித்திடவே அவதரித்த சக்தியிவள்!
கண்ணீரோடு கரைந்திடுவாள் என்று நினைத்தீரோ-உங்கள்
செந்நீரால் புவிகழுவ வந்திட்ட சக்தியிவள்!
கணவன் கயவனானாலும் தெய்வம் என்றோரே-உங்களை
கணப்பொழுதில் பொடியாக்க பிறந்திட்ட சக்தியிவள்!
பாவைகளை கைப்பாவைகளாய் ஆட்டியோரே-வருகின்றாள்
கோவைநிறக் கண்களோடு கோபத்தில் சக்தியிவள்!
ஆயிரம் தவறுகள் செய்தபின்னும் ஆள்வோரே-உங்கள்
ஆணவத்தை வேரறுக்க வந்துவிட்ட சக்தியிவள்!
துணிவின்றி அடுப்படியில் அழமாட்டாள்-அத்தனை
துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த வந்த சக்தியிவள்!
தீக்குளிக்க கம்பன் கண்ட சீதையல்ல-அநீதிகளை
சுட்டெரிக்க ‘பாரதி கண்ட சக்தி’ இவள்!